பிரதமர் வேட்பாளர் விவகாரம் : பா.ஜ., ராஜ்நாத்சிங் உறுதி

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் வேட்பாளராக, மோடியை அறிவிப்பது தொடர்பாக, கட்சிக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. மோடியை, பிரதமர் வேட்பாளராக்குவது தொடர்பான அறிவிப்பு, தக்க நேரத்தில் வெளியாகும்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில், மாநில பா.ஜ., செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது, "குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை, கட்சியின் பிரதமர் வேட்பாளராக உடனே அறிவிக்க வேண்டும்' என, பலரும் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து, ராஜ்நாத் சிங் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியை போல, பா.ஜ.,வில், எந்தப் பிளவு இல்லை. பிரதமர் வேட்பாளர் யார் என்பதில், யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து, தகுந்த நேரத்தில் அறிவிப்பு வெளியாகும். மத்தியில் ஆளும், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பொருளாதார கொள்கையில் மட்டுமின்றி, நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது. உலகில் எந்த ஒரு அரசும், நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு, எதிர்க்கட்சியை காரணம் காட்டியது கிடையாது. இவ்வாறு, ராஜ்நாத் சிங் பேசினார்.