சிரியா மீது ஏவுகணைகள் தாக்குதலா? அமெரிக்கா மறுப்பு

சிரியாவில் அதிபர் ஆசாத் படை இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பொதுமக்கள் 1400 பேரை கொன்றது என்று ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதியாக கூறியுள்ளனர். இதனையடுத்து அமெரிக்கா, சிரியாவின் மீது போர் தொடுக்க செனட் சபையின் ஒப்புதலுக்காக அதிபர் ஒபாமா காத்திருக்கிறார். இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து சிரியா நேக்கி ஏவுகணைகள் வீசப்பட்டதாக ரஷ்யாவில் செய்தி வெளியானது. இன்று காலை 10.16 மணியளவில் கிழக்கு கடற்கரை நோக்கி வீசப்பட்ட 2 ஏவுகணைகள் கடலில் விழுந்துள்ளது. இதனை தெற்கு ரஷ்யாவில் உள்ள அர்மாவிர் எச்சரிக்கை மையத்தின் ராடார்கள் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இதனை ரஷ்ய அரசு உறுதிப்படுத்த வில்லை. ஏவுகணைகள் வீசப்பட்டதாக வெளியான தகவலை சிரியாவில் உள்ள ரஷ்ய தூதரகமும், இஸ்ரேலும் மறுத்துள்ளது. தங்கள் நாட்டிற்குள் ஏவுகணைகள் எதுவும் விழுந்து வெடிக்கவில்லை என்று சிரியா தெரிவித்துள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து அமெரிக்க விமானங்களோ, கப்பல்களோ ஏவுகணைகளை வீசவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பாக அதிபர் புதினுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்தார். எனவே, சிரியாவில் மேற்கு நாடுகளின் ராணுவ நடவடிக்கை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.