பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்கு : மோடி பதவி விலக காங்., கோரிக்கை

பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர், அமித் ஷாவை காப்பாற்ற முயன்ற குஜராத் முதல்வர், நரேந்திர மோடி பதவி விலக வேண்டும்' என, காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு ஆதாரமாக, "சிடி' யையும் வெளியிட்டது. வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில், பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நிறுத்தப்படுவார் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்காக காய் நகர்த்தும் வேலைகள், பல்வேறு வழிகளில் நடந்து வருகிறது. இதற்கு பதிலடியாக, மோடிக்கு எதிரான விஷயங்களை கிளப்பிவிடும் வேலை, காங்கிரஸ் தரப்பில் செய்யப்படுகிறது. குஜராத்தில், துல்சிராம் பிரஜாபதி என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த வாலிபர் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டார் . இதில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வலது கரமாக செயல்பட்ட முன்னாள் அமைச்சர், அமித் ஷாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், அமித் ஷா கைதாகி, ஜாமினில் வெளி வந்தார். இந்நிலையில், பிரஜாபதி போலி என்கவுன்டர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு, இடையூறு ஏற்படுத்தும் வகையில், பா.ஜ.,வை சேர்ந்த, எம்.பி.,க்களான, பிரகாஷ் ஜவேத்கரும், புபேந்திர சிங்கும் செயல்பட்டுள்ளனர் என, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜய் மக்கான், இது தொடர்பாக, நேற்று, "சிடி' ஒன்றை வெளியிட்டார். அமித் ஷாவின் ஜாமினை ரத்து செய்து, அவரை வழக்கில் இருந்து விடுவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அதில் இடம் பெற்று இருந்தன.

இது குறித்து, அஜய் மக்கான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: உண்மை என்ன என்பது, இந்த, "சிடி' மூலம் தெரிய வருகிறது. இது, இந்த வழக்கிற்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. நீதித்துறை நடவடிக்கைகளில், தங்கள் அதிகாரத்தை, ஆளுங்கட்சியினர், வெளிப்படுத்தியுள்ளனர். இது குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை, நரேந்திர மோடி முதல்வர் பதவியை வகிக்க கூடாது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.