மும்பை அருகே கார் மோதியதால் பம்பரமாக சுழன்ற வேன்: கண்காணிப்பு கேமராவில் பதிவானது

மும்பையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நவி மும்பையில் கடந்த 6-ம் தேதி நடந்த பயங்கர விபத்து, இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

6-ம் தேதி இரவு 11 மணியளவில் சிக்னல் அருகே அதிவேகமாக வந்த ஒரு சொகுசு கார், வேன் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் நிலைகுலைந்த அந்த வேன் பம்பரமாக சுழன்றது. உள்ளே இருந்த 4 பேர் வெளியில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். குலைநடுங்க வைக்கும் இந்தக் காட்சிகள் அங்குள்ள பாதுகாப்பு கேமராவில் பதிவானது.

சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, வீடியோவில் பதிவான காட்சிகளை நவி மும்பை காவல்துறை வெளியிட்டுள்ளது. விபத்துக்கு காரணமான சொகுசு காரை ஓட்டி வந்த பியூட்டி பார்லர் உரிமையாளர் சீமா தாக்கூர் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

குடிபோதையில் அவர் கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுதொடர்பான அறிக்கை இதுவரை வெளியிடவில்லை.