ஸ்பெக்ட்ரம் இலவச ஒதுக்கீடு ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

தேசத்தின் மதிப்புமிக்க சொத்து ஸ்பெக்ட்ரம்; அதை இலவசமாக கொடுக்க தர்ம ஸ்தாபனம் அல்ல' என, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, கூடுதல் ஸ்பெக்ட்ரம் இலவசமாக ஒதுக்கப்பட்டது தொடர்பான வழக்கில், மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் அறிவுரை கூறியது.

பார்தி, வோடாபோன், ரிலையன்ஸ், ஐடியா செல்லுலார் ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, கூடுதல் ஸ்பெக்ட்ரம், இலவசமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த விசாரணையில், நீதிபதி, ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச், மத்திய அரசிடம், கடும் கேள்விகளை எழுப்பி, அறிவுரை வழங்கியது. 

இது தொடர்பாக, நீதிபதிகள் எழுப்பிய கேள்வி வருமாறு:தொலைதொடர்பு கம்பெனிகளுக்கு, எவ்வித கட்டணமும் இல்லாமல், இலவசமாக வழங்கப்பட்டது ஏன்? எந்த காரணத்திற்காக வழங்கப்பட்டது? இலவசமாக வழங்குவதற்கு, இது தர்ம ஸ்தாபனம் அல்ல. ராணுவத்திடம் இருந்து, ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை எடுத்து, பொதுமக்களுக்கு தொலைதொடர்பு சேவை வழங்குகிறோம் என்று கூறி, மத்திய அரசு வழங்கியுள்ளது.ஸ்பெக்ட்ரமுக்குரிய விலை, பல்லாயிரம் கோடிகள் ரூபாய். இது, தேசத்தின் சொத்து; இதை இலவசமாக ஒதுக்கீடு செய்யக் கூடாது. தேசிய சொத்துக்களை, ஒதுக்கீடு செய்வதற்குரிய நடைமுறையை, பின்பற்றி இருக்க வேண்டும். கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக, மத்திய அரசு மற்றும் ஏழு தொலை தொடர்பு நிறுவனங்களிடம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தோம். ஆனால், ஓராண்டு ஆகியும், பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதற்காக, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, சுப்ரீம் கோர்ட் சட்ட சேவை ஆணையத்தில், டிபாசிட் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்