பார்லிமென்டில் அமளி: பிரதமர் அறிக்கை சரியில்லை என எதிர்க்கட்சிகள் கூச்சல்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள், காணாமல் போனது தொடர்பாக, பார்லிமென்டின் இரு சபைகளிலும், பிரதமர் மன்மோகன் சிங், நேற்று அறிக்கை தாக்கல் செய்து பேசினார். "அந்த அறிக்கையில், உருப்படியாக எந்த விளக்கமும் இல்லை' எனக்கூறி, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமளியில் இறங்கி, பரபரப்பை ஏற்படுத்தின.


எதிர்க்கட்சிகள் ரகளை:


நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் காணாமல் போனது தொடர்பாக, கடந்த வாரம், பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் ரகளையில் ஈடுபட்டன. "பிரதமர் மன்மோகன் சிங், இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தின. இதையடுத்து, பார்லிமென்டின் இரு சபைகளிலும், பிரதமர் மன்மோகன் சிங், நேற்று அறிக்கை தாக்கல் செய்து பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விஷயத்தில், எதையும் மறைக்க, அரசு முற்படவில்லை. இது குறித்து, விசாரணை நடத்தும், சி.பி.ஐ.,க்கு, முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. காணாமல் போன, சுரங்க ஒதுக்கீடு கோப்புகளை கண்டறிய, அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. அதில், பலன் கிடைக்கவில்லை எனில், சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிடப்படும்.கோப்புகள் காணாமல் போன விவகாரத்தில், யார் குற்றம் செய்தார்களோ, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்."காணாமல் போன கோப்புகள் எவை எவை என்ற பட்டியலை, ஐந்து நாட்களுக்குள் அளிக்க வேண்டும்; தவறு செய்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை, இரண்டு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும்' என, கடந்த மாதம், 29ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை, மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்றும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

உடனே வெளியேறினர்:


முதலில், ராஜ்யசபாவில், 12:30 மணிக்கு, அறிக்கை தாக்கல் செய்த பிரதமர், அதை வாசித்து முடித்தவுடன், கொஞ்சமும் தாமதிக்காமல், சபையை விட்டு வெளியேறி விட்டார். இதை, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், சற்றும் எதிர்பார்க்கவில்லை. தங்களின் கேள்விகள் எதற்கும், உருப்படியாக பதில் அளிக்காமல், ஏதோ கடமைக்காக, ஒரு அறிக்கையை தாக்கல் செய்து விட்டு, அதன் பிறகும், எதிர்க்கட்சிகளை மதிக்காமல், சபையை விட்டு, பிரதமர் வெளியே சென்று விட்டதாக கூறி, பா.ஜ., - எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ., - எம்.பி.,க்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் வெங்கையா நாயுடு, அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் உட்பட, பலர் ஆவேசமாகப் பேசினர். இதையடுத்து, பா.ஜ., - எம்.பி.,க்களுக்கும், காங்கிரஸ் எம்.பி.,க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று, சபை ஒத்திவைக்கப்பட்டது.ராஜ்யசபாவில் அறிக்கை தாக்கல் செய்த பிரதமர், மதிய உணவு இடைவேளைக்கு பின், லோக்சபா வந்தார். அங்கும், தன் அறிக்கையை, மளமளவென வாசித்த பிரதமர், உடனடியாக, சபையை விட்டு வெளியேறினார்.

இதனால், கடும் அதிருப்தியடைந்த, பா.ஜ.,வைச் சேர்ந்த, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ""சபையை அவமதித்து விட்டார் பிரதமர். உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், பிரதமர் நடந்து கொள்கிறார். எதிர்க்கட்சிகளின் எந்த ஒரு கேள்வியையும் எதிர்கொள்ள விருப்பம் இல்லாதவராக உள்ளார்,'' என்றார். இதையடுத்து, பிரதமருக்கு எதிராக, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் கோஷம் எழுப்பினர்.

இந்த சூழ்நிலையில், நிதியமைச்சர் சிதம்பரம் எழுந்து, மசோதா ஒன்றை, தாக்கல் செய்து பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் கோஷங்கள் தொடர்ந்ததால், சபையை ஒத்திவைப்பதாக, சபாநாயகர் அறிவித்தார். தன் பேச்சை பாதியிலேயே முடித்துக் கொள்ள நேரிட்டதால், நிதியமைச்சர் அதிருப்தி அடைந்தார்."பிரதமர் அறிக்கையில், உருப்படியாக எதுவுமே இல்லை' என்று கூறி, சபையில் பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியை ஏற்படுத்திய நேரத்தில், தி.மு.க., பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின், ஐக்கிய ஜனதா தளம், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகளின் எம்.பி.,க்கள் அனைவரும், அமைதியாக இருந்தனர்.

பைல்கள் பட்டியல் :


இதற்கிடையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விசாரணைக்காக, தேவைப்படும் கோப்புகள் பட்டியலை, அட்டர்னி ஜெனரலிடம், சி.பி.ஐ., நேற்று அளித்தது."நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விசாரணைக்கு தேவைப்படும், கோப்புகள் பட்டியலை, அட்டர்னி ஜெனரலிடம், ஐந்து நாட்களுக்குள், சி.பி.ஐ., வழங்க வேண்டும்' என, கடந்த வாரம், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, நிலக்கரி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய, சி.பி.ஐ., தனக்கு தேவையான பைல்கள் பட்டியலை தயாரித்தது. அந்தப் பட்டியலை நேற்று, அட்டர்னி ஜெனரல், வாகன்வதியிடம் ஒப்படைத்தது.