ஆந்‌திராவில் ஜனாதிபதி ஆட்சி?:நீர் போருக்கு வழி முதல்வர்

 தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கு எதிர்ப்புதெரிவித்து வரும் நிலையில் பிரச்னைகளை சமாளிப்பதற்காக ஆந்திர மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 
தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு:


ஆந்திராவை பிரித்து தெலுங்‌கானா மாநிலம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளது. இந்நிலையில் மாநிலத்ததை பிரிக்க கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அரசு நிர்வாகம் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. 
இத‌னை தவிர்க்கும் விதமாக மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா ? என மத்தியஅரசு ஆலோ‌சனை நடத்தி வருகிறது. அரசு ஊழியரகளின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிரான மனு விசாரணையின் போது கருத்து தெரிவித்துள்ள உதவி சொலிசிட்டர் போனம் ‌‌அ‌சோக்கவுட் இத‌னை காரணமாக கூறி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முடியாது என தெரிவித்தார். 
முதல்வர் கடும் எதிர்ப்பு:


தெலுங்கானா தனி மாநில அறிவிப்பிற்கு பின்னர் ஆளும் காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து எம்.பிக்கள், எம்.‌எல்.ஏக்கள் பலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து அதற்கான கடிதங்களை கவர்னரிடம் அளித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் கிரண் குமார் ரெட்டி ‌கட்சிதலைவர் சோனியாவை சந்தித்து தனி மாநில கோரிக்கைக்கு கிளம்பியிருக்கும் எதிர்ப்பு குறித்து விவாதித்தார். இருப்பினும் முதல்வரின் கருத்து நிராகரிக்கப்பட்டது. முன்னதாக கிரண்குமார் ரெட்டி தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தி்யில் பேசுகையில் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டாம் விரைவில் நல்ல பதில் வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கட்சி தலைவர் சோனியாவுடன் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கிரண்குமார்ரெட்டி மக்கள் தான் எஜமானர்கள் மக்களின் கருத்தை மதிக்க தவறினால் அரசியல் வாதிகள் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறினார். ‌மேலும் ‌தெ‌லுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால் மேலும் இரு மாநிலங்களிடையே கிருஷ்ணா நதிநீரை பங்கிடுவதில் பிரச்னை ஏற்பட்டு தண்ணீர் போருக்கு வழிவகுக்கும் சூழ்நிலை உருவாகும்என எச்சரித்தார். 
காங்கிரஸ் தீவிரம்:


இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறுகையில் தனிமாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு 20 தினங்களாக அறிக்கைகளை தயாரித்து வருகிறது. தனி மாநிலம் அமைவது உறுதி. இதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது என கூறினார். 
அதே போல் கட்சியின் பொது செயலாளர் திக்விஜய்சிங் கூறுகையில் தனி மாநில கோரிக்கை என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் பரிந்து‌ரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என கூறினார்.

பார்லிமென்டில் அமளி: பிரதமர் அறிக்கை சரியில்லை என எதிர்க்கட்சிகள் கூச்சல்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள், காணாமல் போனது தொடர்பாக, பார்லிமென்டின் இரு சபைகளிலும், பிரதமர் மன்மோகன் சிங், நேற்று அறிக்கை தாக்கல் செய்து பேசினார். "அந்த அறிக்கையில், உருப்படியாக எந்த விளக்கமும் இல்லை' எனக்கூறி, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமளியில் இறங்கி, பரபரப்பை ஏற்படுத்தின.


எதிர்க்கட்சிகள் ரகளை:


நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் காணாமல் போனது தொடர்பாக, கடந்த வாரம், பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் ரகளையில் ஈடுபட்டன. "பிரதமர் மன்மோகன் சிங், இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தின. இதையடுத்து, பார்லிமென்டின் இரு சபைகளிலும், பிரதமர் மன்மோகன் சிங், நேற்று அறிக்கை தாக்கல் செய்து பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விஷயத்தில், எதையும் மறைக்க, அரசு முற்படவில்லை. இது குறித்து, விசாரணை நடத்தும், சி.பி.ஐ.,க்கு, முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. காணாமல் போன, சுரங்க ஒதுக்கீடு கோப்புகளை கண்டறிய, அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. அதில், பலன் கிடைக்கவில்லை எனில், சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிடப்படும்.கோப்புகள் காணாமல் போன விவகாரத்தில், யார் குற்றம் செய்தார்களோ, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்."காணாமல் போன கோப்புகள் எவை எவை என்ற பட்டியலை, ஐந்து நாட்களுக்குள் அளிக்க வேண்டும்; தவறு செய்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை, இரண்டு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும்' என, கடந்த மாதம், 29ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை, மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்றும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

உடனே வெளியேறினர்:


முதலில், ராஜ்யசபாவில், 12:30 மணிக்கு, அறிக்கை தாக்கல் செய்த பிரதமர், அதை வாசித்து முடித்தவுடன், கொஞ்சமும் தாமதிக்காமல், சபையை விட்டு வெளியேறி விட்டார். இதை, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், சற்றும் எதிர்பார்க்கவில்லை. தங்களின் கேள்விகள் எதற்கும், உருப்படியாக பதில் அளிக்காமல், ஏதோ கடமைக்காக, ஒரு அறிக்கையை தாக்கல் செய்து விட்டு, அதன் பிறகும், எதிர்க்கட்சிகளை மதிக்காமல், சபையை விட்டு, பிரதமர் வெளியே சென்று விட்டதாக கூறி, பா.ஜ., - எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ., - எம்.பி.,க்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் வெங்கையா நாயுடு, அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் உட்பட, பலர் ஆவேசமாகப் பேசினர். இதையடுத்து, பா.ஜ., - எம்.பி.,க்களுக்கும், காங்கிரஸ் எம்.பி.,க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று, சபை ஒத்திவைக்கப்பட்டது.ராஜ்யசபாவில் அறிக்கை தாக்கல் செய்த பிரதமர், மதிய உணவு இடைவேளைக்கு பின், லோக்சபா வந்தார். அங்கும், தன் அறிக்கையை, மளமளவென வாசித்த பிரதமர், உடனடியாக, சபையை விட்டு வெளியேறினார்.

இதனால், கடும் அதிருப்தியடைந்த, பா.ஜ.,வைச் சேர்ந்த, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ""சபையை அவமதித்து விட்டார் பிரதமர். உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், பிரதமர் நடந்து கொள்கிறார். எதிர்க்கட்சிகளின் எந்த ஒரு கேள்வியையும் எதிர்கொள்ள விருப்பம் இல்லாதவராக உள்ளார்,'' என்றார். இதையடுத்து, பிரதமருக்கு எதிராக, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் கோஷம் எழுப்பினர்.

இந்த சூழ்நிலையில், நிதியமைச்சர் சிதம்பரம் எழுந்து, மசோதா ஒன்றை, தாக்கல் செய்து பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் கோஷங்கள் தொடர்ந்ததால், சபையை ஒத்திவைப்பதாக, சபாநாயகர் அறிவித்தார். தன் பேச்சை பாதியிலேயே முடித்துக் கொள்ள நேரிட்டதால், நிதியமைச்சர் அதிருப்தி அடைந்தார்."பிரதமர் அறிக்கையில், உருப்படியாக எதுவுமே இல்லை' என்று கூறி, சபையில் பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியை ஏற்படுத்திய நேரத்தில், தி.மு.க., பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின், ஐக்கிய ஜனதா தளம், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகளின் எம்.பி.,க்கள் அனைவரும், அமைதியாக இருந்தனர்.

பைல்கள் பட்டியல் :


இதற்கிடையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விசாரணைக்காக, தேவைப்படும் கோப்புகள் பட்டியலை, அட்டர்னி ஜெனரலிடம், சி.பி.ஐ., நேற்று அளித்தது."நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விசாரணைக்கு தேவைப்படும், கோப்புகள் பட்டியலை, அட்டர்னி ஜெனரலிடம், ஐந்து நாட்களுக்குள், சி.பி.ஐ., வழங்க வேண்டும்' என, கடந்த வாரம், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, நிலக்கரி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய, சி.பி.ஐ., தனக்கு தேவையான பைல்கள் பட்டியலை தயாரித்தது. அந்தப் பட்டியலை நேற்று, அட்டர்னி ஜெனரல், வாகன்வதியிடம் ஒப்படைத்தது.

ஸ்பெக்ட்ரம் இலவச ஒதுக்கீடு ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

தேசத்தின் மதிப்புமிக்க சொத்து ஸ்பெக்ட்ரம்; அதை இலவசமாக கொடுக்க தர்ம ஸ்தாபனம் அல்ல' என, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, கூடுதல் ஸ்பெக்ட்ரம் இலவசமாக ஒதுக்கப்பட்டது தொடர்பான வழக்கில், மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் அறிவுரை கூறியது.

பார்தி, வோடாபோன், ரிலையன்ஸ், ஐடியா செல்லுலார் ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, கூடுதல் ஸ்பெக்ட்ரம், இலவசமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த விசாரணையில், நீதிபதி, ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச், மத்திய அரசிடம், கடும் கேள்விகளை எழுப்பி, அறிவுரை வழங்கியது. 

இது தொடர்பாக, நீதிபதிகள் எழுப்பிய கேள்வி வருமாறு:தொலைதொடர்பு கம்பெனிகளுக்கு, எவ்வித கட்டணமும் இல்லாமல், இலவசமாக வழங்கப்பட்டது ஏன்? எந்த காரணத்திற்காக வழங்கப்பட்டது? இலவசமாக வழங்குவதற்கு, இது தர்ம ஸ்தாபனம் அல்ல. ராணுவத்திடம் இருந்து, ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை எடுத்து, பொதுமக்களுக்கு தொலைதொடர்பு சேவை வழங்குகிறோம் என்று கூறி, மத்திய அரசு வழங்கியுள்ளது.ஸ்பெக்ட்ரமுக்குரிய விலை, பல்லாயிரம் கோடிகள் ரூபாய். இது, தேசத்தின் சொத்து; இதை இலவசமாக ஒதுக்கீடு செய்யக் கூடாது. தேசிய சொத்துக்களை, ஒதுக்கீடு செய்வதற்குரிய நடைமுறையை, பின்பற்றி இருக்க வேண்டும். கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக, மத்திய அரசு மற்றும் ஏழு தொலை தொடர்பு நிறுவனங்களிடம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தோம். ஆனால், ஓராண்டு ஆகியும், பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதற்காக, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, சுப்ரீம் கோர்ட் சட்ட சேவை ஆணையத்தில், டிபாசிட் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்

ஊழல் பின்னணியில் காலம் தள்ள விரும்பவில்லை : கேரள முதல்வர் உம்மன் சாண்டி விரக்தி

"ஊழல் குற்றச்சாட்டின் நிழலில், காலம் தள்ள விரும்பவில்லை. சூரியசக்தி மின்சார பேனல் முறைகேடு தொடர்பாக, எந்த விசாரணைக்கும் தயார்,'' என, கேரள முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, உம்மன் சாண்டி கூறியுள்ளார்.

பல கோடி முறைகேடு : கேரளாவில், சூரியசக்தி மின்சார பேனல் தயாரித்து தருவதாக கூறி, சரிதா நாயர் என்ற பெண், ஏராளமானோரிடம், பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, புகார் எழுந்தது.
இந்த ஊழலில், முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, உம்மன் சாண்டிக்கும், அவரின் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும், தொடர்பு உள்ளதாக, பிரதான எதிர்க்கட்சியான, இடதுசாரி கூட்டணியினர், போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். மாநில அரசும், விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. ஆனாலும்,"முறைகேட்டுக்கு பொறுப்பேற்று, முதல்வர் உம்மன் சாண்டி, தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், ஆளும், காங்., கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கு இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆளும் கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம், திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது.

பிரதமர் வேட்பாளர் விவகாரம் : பா.ஜ., ராஜ்நாத்சிங் உறுதி

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் வேட்பாளராக, மோடியை அறிவிப்பது தொடர்பாக, கட்சிக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. மோடியை, பிரதமர் வேட்பாளராக்குவது தொடர்பான அறிவிப்பு, தக்க நேரத்தில் வெளியாகும்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில், மாநில பா.ஜ., செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது, "குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை, கட்சியின் பிரதமர் வேட்பாளராக உடனே அறிவிக்க வேண்டும்' என, பலரும் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து, ராஜ்நாத் சிங் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியை போல, பா.ஜ.,வில், எந்தப் பிளவு இல்லை. பிரதமர் வேட்பாளர் யார் என்பதில், யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து, தகுந்த நேரத்தில் அறிவிப்பு வெளியாகும். மத்தியில் ஆளும், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பொருளாதார கொள்கையில் மட்டுமின்றி, நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது. உலகில் எந்த ஒரு அரசும், நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு, எதிர்க்கட்சியை காரணம் காட்டியது கிடையாது. இவ்வாறு, ராஜ்நாத் சிங் பேசினார்.

இட ஒதுக்கீடு: மாயாவதி காரசாரம்

அரசு பணிகளில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட திருத்தம் கோரி, பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி, ராஜ்யசபாவில் நேற்று காரசாரமாக பேசினார். ""அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவை, பல மாநில அரசுகள் பின்பற்றத் துவங்கி விட்டன. இது குறித்து அரசியல் சட்ட திருத்தம், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது; லோக்சபாவில் நிலுவையில் உள்ளது.
அதை விரைந்து நிறைவேற்ற வேண்டும்,'' என, மாயாவதி கூறினார். அவருக்கு ஆதரவாக, அவர் கட்சி, எம்.பி.,க்கள் குரல் கொடுத்ததால், சபையில், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சட்ட அமைச்சர், கபில்சிபல், ""சுப்ரீம் கோர்ட் உத்தரவை மறுஆய்வு செய்ய, மேல் முறையீடு செய்துள்ளோம்; லோக்சபாவிலும் திருத்தத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என்றார். எனினும், அதை கேட்காமல், பகுஜன் சமாஜ், எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், சபை, பத்து நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டசபை முன் போராட்டம்

"தெலுங்கானா மாநிலம் தேவையில்லை; ஒருங்கிணைந்த ஆந்திரா அவசியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த, 15 அமைச்சர்கள், 40 எம்.எல். ஏ.,க்கள், 15 எம்.எல்.சி.,க்கள், நேற்று, ஐதராபாத் நகரில், மாநில சட்டசபை முன், நான்கு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். "ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும்' என, ஜூலை 30ல், மத்திய அரசு அறிவித்ததில் இருந்து, அம்மாநிலத்தில் இரு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்கு : மோடி பதவி விலக காங்., கோரிக்கை

பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர், அமித் ஷாவை காப்பாற்ற முயன்ற குஜராத் முதல்வர், நரேந்திர மோடி பதவி விலக வேண்டும்' என, காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு ஆதாரமாக, "சிடி' யையும் வெளியிட்டது. வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில், பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நிறுத்தப்படுவார் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்காக காய் நகர்த்தும் வேலைகள், பல்வேறு வழிகளில் நடந்து வருகிறது. இதற்கு பதிலடியாக, மோடிக்கு எதிரான விஷயங்களை கிளப்பிவிடும் வேலை, காங்கிரஸ் தரப்பில் செய்யப்படுகிறது. குஜராத்தில், துல்சிராம் பிரஜாபதி என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த வாலிபர் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டார் . இதில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வலது கரமாக செயல்பட்ட முன்னாள் அமைச்சர், அமித் ஷாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், அமித் ஷா கைதாகி, ஜாமினில் வெளி வந்தார். இந்நிலையில், பிரஜாபதி போலி என்கவுன்டர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு, இடையூறு ஏற்படுத்தும் வகையில், பா.ஜ.,வை சேர்ந்த, எம்.பி.,க்களான, பிரகாஷ் ஜவேத்கரும், புபேந்திர சிங்கும் செயல்பட்டுள்ளனர் என, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜய் மக்கான், இது தொடர்பாக, நேற்று, "சிடி' ஒன்றை வெளியிட்டார். அமித் ஷாவின் ஜாமினை ரத்து செய்து, அவரை வழக்கில் இருந்து விடுவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அதில் இடம் பெற்று இருந்தன.

இது குறித்து, அஜய் மக்கான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: உண்மை என்ன என்பது, இந்த, "சிடி' மூலம் தெரிய வருகிறது. இது, இந்த வழக்கிற்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. நீதித்துறை நடவடிக்கைகளில், தங்கள் அதிகாரத்தை, ஆளுங்கட்சியினர், வெளிப்படுத்தியுள்ளனர். இது குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை, நரேந்திர மோடி முதல்வர் பதவியை வகிக்க கூடாது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அத்வானிக்கு எதிரான வழக்கு முன் கூட்டியே விசாரிக்க முடிவு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு எதிரான மனு, முன் கூட்டியே விசாரிக்கப்படும்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில், சதி செய்ததாக, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மற்றும் 19 பேருக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை, அலகாபாத் ஐகோர்ட், ரத்து செய்தது. இதை எதிர்த்து, சி.பி.ஐ., சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மேல் முறையீடு செய்யப்பட்டது. "இந்த வழக்கின் விசாரணை, டிசம்பரிலிருந்து துவங்கும்' என, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், "இந்த வழக்கை, முன் கூட்டியே விசாரிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில், புதிதாக, ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி, ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான,"பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தபோது, "முன் கூட்டியே விசாரிப்பதற்கு, அத்வானி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டிசம்பருக்கு பதிலாக, அக்டோபர் மாதம், முதல் வாரத்திலிருந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்

சிரியா மீது ஏவுகணைகள் தாக்குதலா? அமெரிக்கா மறுப்பு

சிரியாவில் அதிபர் ஆசாத் படை இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பொதுமக்கள் 1400 பேரை கொன்றது என்று ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதியாக கூறியுள்ளனர். இதனையடுத்து அமெரிக்கா, சிரியாவின் மீது போர் தொடுக்க செனட் சபையின் ஒப்புதலுக்காக அதிபர் ஒபாமா காத்திருக்கிறார். இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து சிரியா நேக்கி ஏவுகணைகள் வீசப்பட்டதாக ரஷ்யாவில் செய்தி வெளியானது. இன்று காலை 10.16 மணியளவில் கிழக்கு கடற்கரை நோக்கி வீசப்பட்ட 2 ஏவுகணைகள் கடலில் விழுந்துள்ளது. இதனை தெற்கு ரஷ்யாவில் உள்ள அர்மாவிர் எச்சரிக்கை மையத்தின் ராடார்கள் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இதனை ரஷ்ய அரசு உறுதிப்படுத்த வில்லை. ஏவுகணைகள் வீசப்பட்டதாக வெளியான தகவலை சிரியாவில் உள்ள ரஷ்ய தூதரகமும், இஸ்ரேலும் மறுத்துள்ளது. தங்கள் நாட்டிற்குள் ஏவுகணைகள் எதுவும் விழுந்து வெடிக்கவில்லை என்று சிரியா தெரிவித்துள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து அமெரிக்க விமானங்களோ, கப்பல்களோ ஏவுகணைகளை வீசவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பாக அதிபர் புதினுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்தார். எனவே, சிரியாவில் மேற்கு நாடுகளின் ராணுவ நடவடிக்கை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்மின் நிலையத்துக்காக காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்க கூடாது: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு நீர்மின் திட்டத்துக்காக அணை கட்ட திட்டமிட்டுள்ள விவகாரத்தை உங்கள் கவனத்துக்கு அவசரமாக கொண்டு வருகிறேன்.
கர்நாடக சட்ட மந்திரி இதுதொடர்பாக கூறியுள்ள தகவல்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன. அதில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் நீர்மின் சக்தி திட்டத்துக்காக அணைகட்டபோவதாக கூறியுள்ளார். அங்கு 3 இடங்களில் அணை கட்ட போவதாகவும், மேலும் ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் அணைகளின் உபரி தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்துவதற்காக ரூ. 500–ல் இருந்து ரூ.600 கோடி செலவில் திட்டங்களை உருவாக்கி இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி உத்தரவுக்கு மாறாக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். காவிரி நடுவர்மன்றம் காவிரி நீரை பயன்படுத்துவது தொடர்பாக வரையறை செய்துள்ள நிலையில் அவர்கள் திட்டங்களை உருவாக்கி உள்ளனர்.
கர்நாடகாவின் இந்த செயல் முற்றிலும் சட்ட விரோதமானது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர். மேலும், காவிரியின் இயற்கை நீரோட்டத்தை தடுப்பதுடன் தமிழ்நாட்டின் பாசன வசதியை கடுமையாக பாதிக்கும் செயலையும் செய்துள்ளனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக காவிரி நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்புக்கு எதிராக இவை அனைத்தும் அமைந்துள்ளன. எனவே, கர்நாடக அரசு இந்த திட்டங்களை கீழ்பாசன மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுத்த அனுமதிக்க கூடாது. காவிரி நடுவர் மன்றம் அளித்த உத்தரவுபடி காவிரி மேலாண்மை குழு இன்னும் அமைக்கப்படவில்லை. எனவே காவிரி நீர் பயன்பாட்டை முறையாக கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை. இந்த நேரத்தில் கர்நாடக அணை கட்ட திட்டமிடுவது காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக இருப்பதோடு மட்டுமல்லாது கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிராக அமைந்திருக்கிறது.
மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை பொறுத்தவரையில் கீழ்பாசன மாநிலங்கள் அனுமதி இல்லாமல் மேல்பாசன பகுதி மாநிலங்கள் எந்த கட்டுமானங்களையும் செய்யக்கூடாது என்பது கூட்டாட்சி முறையாகும். ஆனால் அதை கர்நாடகா மீறுகிறது.
மேலும் மேகதாது மின் உற்பத்தி திட்டம், சிவசமுத்திரம் அணை திட்டம், ஒகேனக்கல், ரசிமனால் நீர்மின் திட்டம் போன்ற திட்டங்கள் தொடர்பாக தமிழ்நாடு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளது. இந்த திட்டங்களை தேசிய நீர்மின் உற்பத்தி கழகம் அல்லது மத்திய அரசின் மின்உற்பத்தி அமைப்பு ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தலாம் எனவும் கூறியிருந்தோம். இந்த விவகாரம் கோர்ட்டில் இருக்கும்போது அவர்கள் தன்னிச்சையாக அணை திட்டங்களை உருவாக்குவது கோர்ட்டுக்கு எதிரானதாகும்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி நடுவர் மன்ற மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்குமுறை குழுவையும் அமைக்க வேண்டும் என்று மத்திய நீர்வள துறைக்கு உத்தரவிடுமாறு உங்களை நான் பலமுறை வற்புறுத்தி வருகிறேன். ஆனால் இதுவரை அது அமைக்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் நீங்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு கர்நாடகாவுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். காவிரி படுகையில் தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மின்உற்பத்தி திட்டம் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் உருவாக்க கூடாது என்று கூற வேண்டும். மேலும் காவிரி கண்காணிப்பு குழு அமைக்கப்படும் வரை இந்த திட்டங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை நிர்வாகத்திற்கு நீங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் நீங்கள் உடனடி தலையிட்டு சாதகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

மும்பை அருகே கார் மோதியதால் பம்பரமாக சுழன்ற வேன்: கண்காணிப்பு கேமராவில் பதிவானது

மும்பையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நவி மும்பையில் கடந்த 6-ம் தேதி நடந்த பயங்கர விபத்து, இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

6-ம் தேதி இரவு 11 மணியளவில் சிக்னல் அருகே அதிவேகமாக வந்த ஒரு சொகுசு கார், வேன் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் நிலைகுலைந்த அந்த வேன் பம்பரமாக சுழன்றது. உள்ளே இருந்த 4 பேர் வெளியில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். குலைநடுங்க வைக்கும் இந்தக் காட்சிகள் அங்குள்ள பாதுகாப்பு கேமராவில் பதிவானது.

சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, வீடியோவில் பதிவான காட்சிகளை நவி மும்பை காவல்துறை வெளியிட்டுள்ளது. விபத்துக்கு காரணமான சொகுசு காரை ஓட்டி வந்த பியூட்டி பார்லர் உரிமையாளர் சீமா தாக்கூர் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

குடிபோதையில் அவர் கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுதொடர்பான அறிக்கை இதுவரை வெளியிடவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராஜ்யசபாவில் எதிர்ப்பு : திரிணமுல், இடதுசாரி எம்.பி.,க்கள் வெளிநடப்பு

பெட்ரோல் விலை உயர்வு, ராஜ்யசபாவில் நேற்று எதிரொலித்தது. மத்திய அரசு மீது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினர். சபையில் விவாதம் நடத்த, அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, திரிணமுல் மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்தனர்.
கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரித்து விட்டதாக கூறி, பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 2.35 ரூபாயும், டீசல் விலை, லிட்டருக்கு, 50 காசுகளும், இரண்டு நாட்களுக்கு முன், உயர்த்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, சமையல் "காஸ்' மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளையும், கணிசமாக உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரச்னை, ராஜ்யசபாவில், நேற்று எதிரொலித்தது. மார்க்சிஸ்ட் உறுப்பினர், பிரசாந்தா சட்டர்ஜி, பேசியதாவது: கடந்த மூன்று மாதங்களில், இதுவரை, ஆறு முறை, பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சாதாரண மக்கள், பெரும் அவதி அடைந்துள்ளனர். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசு, தவறு செய்து விட்டு, அதன் சுமையை, மக்கள் மீது சுமத்துகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
பா.ஜ., உறுப்பினர், வெங்கய்யா நாயுடு,""பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும்போது, பார்லி.,க்கு வெளியில், விலை உயர்வை அறிவித்தது, தவறானது. இது, மக்கள் விரோத நடவடிக்கை. பெட்ரோல் பங்குகளை இரவு நேரத்தில் மூடுவதற்கு உத்தரவிட்டது குறித்து, விவாதம் நடத்த வேண்டும்,''என்றார்.

திரிணமுல் காங்., உறுப்பினர், டெரக் ஓ பிரெயன் பேசுகையில்,""பெட்ரோல் விலையை உயர்த்தியதன் மூலம், நாட்டு மக்கள் மீது, காங்கிரஸ் கட்சி, போர் தொடுத்துள்ளது. பெட்ரோல் பங்குகளை, இரவு நேரத்தில் அடைக்க வேண்டும் என, அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுவதும், மோசமான கருத்து,''என்றார்.
இந்த பிரச்னையால், கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து, 15 நிமிடங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும், சபை கூடியதும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர், சீதாராம் யெச்சூரி, மறுபடியும், இந்த பிரச்னையை எழுப்பினார். அவர் பேசுகையில்,""பெட்ரோல் விலை உயர்வை, வாபஸ் வாங்க வேண்டும். இது தொடர்பாக, சபையில், இப்போதே விவாதம் நடத்த வேண்டும்,'' என்றார்.
ராஜ்யசபா துணை தலைவர், குரியன், இதை ஏற்க மறுத்ததை அடுத்து, இடதுசாரி கட்சி உறுப்பினர்களும், திரிணமுல் காங்., உறுப்பினர்களும், சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

நிலக்கரி ஊழல் : பா.ஜ., பாய்ச்சல் : நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு குறித்த முக்கிய ஆவணங்கள் மாயமானது குறித்த பிரச்னையை, ராஜ்யசபாவில் நேற்று, பா.ஜ., எம்.பி., பிரகாஷ் ஜாவேடகர் எழுப்பினார். அவர் பேசியதாவது: நிலக்கரி ஊழல் என்பது, பிரமாண்டமான ஊழல். அது தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேள்வி கேட்டபோது,"நான் என்ன, ஆவணங்களை காக்கும் வேலையையா செய்கிறேன்' என, பிரதமர், எரிந்து விழுகிறார். ஆவணங்களை மட்டுமல்ல; நாட்டையும் பாதுகாக்க வேண்டிய கடமை, அவருக்கு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டு வேலைகளையுமே, அவர், ஒழுங்காக செய்யவில்லை. இதுகுறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு, பிரகாஷ் ஜாவேடகர் பேசினார். இதற்கு, காங்., உறுப்பினர்கள், எதிர்ப்பு தெரிவித்ததால், அமளி ஏற்பட்டது

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் சோனியா

 காங்., தலைவர் சோனியா, மருத்துவ பரிசோதனைக்காக, நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
காங்., தலைவர் சோனியாவுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர், அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு, அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதைத் தொடர்ந்து, அவ்வப்போது, அமெரிக்காவுக்கு சென்று, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம், லோக்சபாவில் உணவு பாதுகாப்பு மசோதா குறித்த ஓட்டெடுப்பு நடந்தபோது, சோனியாவுக்கு, திடீரென, உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார். இதன்பின், சிறிது நேரத்திலேயே, டிஸ்சார்ஜ் ஆகி, வீடு திரும்பினார். 
இந்நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக, சோனியா, நேற்று அமெரிக்கா 
புறப்பட்டுச் சென்று உள்ளார். அவரின் மகள், பிரியங்காவும், உடன் சென்றுள்ளார்

தவறை மறைக்க பழி சுமத்தும் மத்திய அரசு: அத்வானி பாய்ச்சல்

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை, பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தன் தவறை மறைக்க, மற்றவர்கள் மீது பழி சுமத்த, மத்திய அரசு முயற்சிக்கிறது,'' என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறியுள்ளார்.

பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறியுள்ளதாவது: அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே இதற்கு காரணம். இது தொடர்பாக, பத்திரிகைகளில், மத்திய அரசுக்கு எதிராக, கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. மத்திய அரசு, ஊழல் அரசாகவே, அடையாளப்படுத்தப்படுகிறது. திருப்பதி, ஷீரடி, மும்பை சித்தி விநாயகர் கோவில்கள் மற்றும் கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவில் ஆகியவற்றில், பக்கதர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும், பணமாக மாற்றுவதற்கு, மத்திய அரசு முயற்சிப்பதாகவும், பத்திரிகைகளில், தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மத்திய அரசோ, இதையெல்லாம், உணர்ந்ததாக தெரியவில்லை. தன் தவறுகளை மறைப்பதற்கு, மற்றவர்கள் மீது, மத்திய அரசு பழிபோட முயற்சிக்கிறது. இவ்வாறு, அத்வானி கூறியுள்ளார்.

பார்லிமென்டில் ரகளையில் ஈடுபட்ட 11 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்

தெலுங்கானா விவகாரம் நேற்று மீண்டும் பார்லிமென்டில் எதிரொலித்தது. லோக்சபாவில், இந்தப் பிரச்னையை எழுப்பி அமளியில் ஈடுபட்ட, காங்கிரஸ் எம்.பி.,க்கள், ஐந்து பேர், தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள், நான்கு பேர் என, மொத்தம், ஒன்பது எம்.பி.,க்களை, சபாநாயகர் மீராகுமார், "சஸ்பெண்ட்' செய்தார்.இருந்தாலும், சபையிலிருந்து வெளியேறாமல், அந்த எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டதால், லோக்சபா நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இதேபோல், ராஜ்யசபாவிலும், அமளியில் ஈடுபட்ட, தெலுங்கு தேச எம்.பி.,க்கள் இருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தெலுங்கானா மாநிலம்:ஆந்திராவை பிரித்து தெலுங்கான தனி மாநிலம் உருவாக்க, காங்கிரஸ் செயற்குழுவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் முடிவு செய்தன. இதற்கு, ஆந்திராவின் கடலோர பகுதிகள் மற்றும் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த, அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர், கடந்த மாதம், 5ம் தேதி துவங்கியது. அன்று முதல், தெலுங்கானா பிரச்னையை எழுப்பி, காங்கிரஸ் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டு வந்தனர். அதனால், உணவு பாதுகாப்பு மசோதா மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை, லோக்சபாவில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உருவானது.

முதலில் ஐந்து நாட்கள்:


இதையடுத்து, ஆந்திராவை சேர்ந்த, 12 எம்.பி.,க்கள், கடந்த மாதம், 23ம் தேதி, ஐந்து நாட்களுக்கு, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதன்பின், உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஐந்து நாள், சஸ்பெண்ட் நடவடிக்கை முடிந்து, அந்த எம்.பி.,க்கள், கடந்த வெள்ளியன்று மீண்டும் சபைக்கு வந்தனர். அதன்பின், மீண்டும் தெலுங்கானா பிரச்னையை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நேற்று காலை, லோக்சபா கூடியதும், ஓய்வூதிய மசோதாவை தாக்கல் செய்ய, மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் தயாராக இருந்தார். ஆனால், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த, நான்கு எம்.பி.,க்கள், சபையின் மையத்திற்கு வந்து, தெலுங்கானா தனி மாநில பிரிவினைக்கு எதிராக கோஷமிட்டனர்.அத்துடன், நான்கு எம்.பி.,க்களில், ஒருவரான, சிவபிரசாத், முன்னாள் பிரதமர் இந்திராவின் முகமூடியை மாட்டியபடி, சபையை வலம் வந்து கோஷமிட்டார். 

தெலுங்கானா போராட்டத்தை, இதற்கு முன், பிசுபிசுக்க வைத்தவர், இந்திரா என்பதால், அவர் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. சிவபிரசாத்தின் செயலுக்கு, காங்கிரஸ் எம்.பி.,க்கள், பெரிய அளவில் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவர் முகமூடியை கழற்ற வேண்டிய நிலை உருவானது.இதற்கிடையில், ஆந்திராவை சேர்ந்த, காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஐந்து பேரும், சபையின் மையத்திற்கு வந்து, "ஒன்றுபட்ட ஆந்திராவே எங்களுக்கு தேவை; எங்களுக்கு நீதி வேண்டும்' என, கோஷமிட்டனர்.இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட, ஆந்திர காங்., - எம்.பி.,க்கள், ஐந்து பேர், தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள் நான்கு பேர் என, மொத்தம், ஒன்பது பேரை, ஐந்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக, சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார்.

ஒத்திவைப்பு:


"லோக்சபா ஒழுங்கு நடவடிக்கை விதி எண், 374 ஏ-ன் கீழ், சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்தல், கோஷங்கள் போடுதல் மற்றும் அலுவல்கள் மேற்கொள்ள விடாமல் தடுத்தல் போன்ற குற்றங்களுக்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றும் அவர் கூறினார். அத்துடன், சபை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.அப்போது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட தெலுங்கு தேச எம்.பி.,க்கள் நான்கு பேர் மட்டும், சபையை விட்டு வெளியேறாமல், உள்ளேயே அமர்ந்திருந்தனர்.மீண்டும் சபை கூடிய போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.,க்கள் அமளியில் இறங்கினர். அவர்கள் அரசுக்கு எதிராக, கோஷமிட ஆரம்பித்தவுடன், அமளி உருவானது. 

தொடர் கோஷம்:



அப்போது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆந்திர எம்.பி.,க்களுடன், அவர்களும் சேர்ந்து கோஷமிட்டதால், சபையை நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இதையடுத்து, நாள் முழுவதற்கும் சபை ஒத்திவைக்கப்பட்டது. பார்லிமென்டின் ஒரு கூட்டத் தொடரில், ஒரு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்ட, எம்.பி.,க்கள், மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது இது முதல் முறை எனக் கூறப்படுகிறது.இதேபோல், ராஜ்யசபாவிலும், தெலுங்கானா பிரச்னையை எழுப்பி, அமளியில் ஈடுபட்ட, தெலுங்கு தேச எம்.பி.,க்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அமளியில் ஈடுபட்ட, காங்கிரஸ் எம்.பி.,க்கள், ஐந்து பேர், தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள், நான்கு பேர் என, மொத்தம், ஒன்பது எம்.பி.,க்களை, சபாநாயகர் மீராகுமார், "சஸ்பெண்ட்' செய்தார்

கச்சத்தீவு பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம்: பாரதிய ஜனதா கோரிக்கை

"கச்சத்தீவு, இலங்கைக்கு சொந்தமானது என, கூறுவதை, ஏற்க முடியாது. இதுபற்றி விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்' என, பா.ஜ., கோரியுள்ளது.

"ராமேஸ்வரம் அருகேயுள்ள கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. அதை, திரும்பப் பெறும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, முதல்வர் ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட்டில், மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

கேள்விக்கே இடமில்லை:


இந்த மனு, சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில், பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கச்சத்தீவு இந்திய அரசால், இலங்கைக்கு வழங்கப்படவில்லை; அதனால், அதை மீட்பது என்ற கேள்விக்கே இடமில்லை' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தமிழக மக்களுக்கு, குறிப்பாக, மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் பலவும், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்நிலையில், ராஜ்யசபாவில் நேற்று, இந்தப் பிரச்னையை, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள் பெரிய அளவில் எழுப்பினர்.

ராஜாவுக்கு சொந்தம்:


அப்போது, நடந்த விவாதத்தின் போது, அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் பேசியதாவது:கச்சத்தீவு என்பது, ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது. இதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் எல்லாம், இன்றும் தெளிவாக உள்ளன.கடந்த, 1974ல், கச்சத்தீவை தாரை வார்ப்பது தொடர்பாக, அப்போதைய வெளியுறவு அமைச்சர் தினேஷ்சிங், பார்லிமென்டில் பேசும்போது, "இந்தியாவின், ஒருங்கிணைந்த அங்கமே கச்சத் தீவு' என, கூறியிருந்தார்.இதுதொடர்பாக, அப்போது நடைபெற்ற விவாதத்தில் பங் கேற்று பேசிய, முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், "இது ஒப்பந்தமே அல்ல. இலங்கையிடம், இந்தியா அடையும், சரணகதி படலம்; கச்சத் தீவை ஒப்படைப்பது, முற்றிலும் தவறானது' என, தெரிவித்து உள்ளார். இவை எல்லாமே, பார்லிமென்ட் ஆவணங்களில் இன்றளவும் உள்ளன.இலங்கையில், தமிழர்கள், கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கபட்ட விவகாரம், தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கும் பிரச்னை, கச்சத்தீவை மீட்கும் விவகாரம் என, அத்தனையிலும், தமிழகத்திற்கு விரோதமான போக்கையே, மத்திய அரசு மேற்கொள்கிறது. இதற்கு, வரும் தேர்தலில், காங்கிரசோடு கூட்டணி சேரும், எந்த கட்சிக்கும், தமிழக மக்கள் கடுமையான பாடம் புகட்டுவர்.இவ்வாறு மைத்ரேயன் பேசினார்.

இலங்கைக்கு சொந்தமா?



பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது:
கச்சத்தீவு, இலங்கைக்கு சொந்தமானது என, மத்திய அரசு திரும்ப திரும்ப கூறுகிறது. இதை, நிச்சயமாக ஏற்க முடியாது. கச்சத்தீவு, நம்நாட்டோடு ஒருங்கிணைந்த அங்கம். அதை, நம்நாட்டிடமிருந்து பிரித்து பார்க்க முடியாது. தமிழக மீனவர்கள் மீது, தாக்குதல் நடத்துவதற்கு அடிப்படையாக, கச்சத்தீவு விவகாரம் உள்ளதால், இதுபற்றி விவாதிக்க, உடனடியாக, அனைத்துக் கட்சி கூட்டத்தை, மத்திய அரசு கூட்ட வேண்டும்.இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

தாக்குதல்:



தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசியதாவது:தமிழக மீனவர்கள், தொடர்ச்சியாக தாக்கப்படுகின்றனர். ராமேஸ்வரத்திற்கும், இலங்கை தலைமன்னாருக்கும் இடையே, வெறும், 20 மைல்களே உள்ளன. இதில்போய், சர்வதேச கடல் எல்லைக் கோடு வகுப்பதும், அதை தாண்டி மீன் பிடிக்க செல்லக் கூடாது என, கூறுவதும், ஏற்க முடியாதது.தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைக்க, கச்சத்தீவு விவகாரத்திற்கு தீர்வு காண, வேண்டும். இதுதொடர்பாக, தி.மு.க., சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்விஷயத்தில், மத்திய அரசு, உரிய கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு கனிமொழி பேசினார். 

தெலுங்கானா தனி மாநில தீர்மானத்திற்கு சில வாரங்களில் அமைச்சரவை ஒப்புத

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவது தொடர்பான தீர்மானத்திற்கு, அடுத்த சில வாரங்களில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.
டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய, ஷிண்டே கூறியதாவது: ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான தீர்மானத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்காக, அமைச்சரவை குறிப்பு ஒன்றை, நாங்கள் தயாரித்து வருகிறோம். இந்த குறிப்பு தயாரானதும், சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின், 20 நாட்களுக்குள், மத்திய அமைச்சரவையில் அது சமர்ப்பிக்கப்படும். 

தெலுங்கானா தீர்மானத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும், ஆந்திராவை பிரிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, ஆய்வு செய்ய, அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழுவின் ஆய்வுக்குப் பின், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த தீர்மானம், ஆந்திர மாநில சட்டசபைக்கு அனுப்பி வைக்கப்படும். தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால், அது நாட்டின், 29வது மாநிலமாக இருக்கும். இவ்வாறு ஷிண்டே கூறினார்.

உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு பார்லிமென்ட் ஒப்புதல்

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, மசோதாவிற்கு பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து விரைவில் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

ஏழை மக்களுக்கு, மலிவு விலையில் உணவு தானியங்களை வழங்கும், உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் அவசர சட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த, ஜூலை மாதம், 5ம்தேதி, கையெழுத்திட்டார்.இந்த மசோதா, கடந்த மாதம், 26ம்தேதி, லோக்சபாவில், பலத்த விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா நேற்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மசோதாவில் திருத்தம் செய்யும் படி, இடது சாரி உள்ளிட்ட கட்சிகள் கோரியிருந்தன. இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பின் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால் கொண்டு வந்த சில திருத்தங்களை வாபஸ் பெற்றுக்கொண்டார். பா.ஜ.,வின் வெங்கையா நாயுடு, பிரகாஷ் ஜாவேத்கர் ஆகியோர் தங்களது திருத்தங்கள் குறித்து வலியுறுத்தவில்லை. பின்னர் நாள் முழுவதும் நடந்த விவாதத்திற்கு பின்னர் குரல் ஓட்டெடுப்பு மூலம் உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. 

முன்னதாக இந்த மசோதா மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் தாமஸ், உணவு பாதுகாப்பு மசோதாவால் நாட்டின் கூட்டாட்சி முறைக்கு பாதிப்பு வராது பல மாநிலங்களில் ரேஷன் முறை சிறப்பாக உள்ளது என பல உறுப்பினர்கள் கூறினர். ரேஷன் முறை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கேரளாவில் அரிசி கிலோ ரூ. 1க்கு விற்பனை செய்யப்படுகிறது.மத்திய அரசு, அரிசியை கூடுதல் விலைக்கு வாங்கி, கிலோ ஒன்றிற்கு ரூ.24 மானியம் வழங்குகிறது. மத்திய அரசு வழங்கும் ரூ.5க்கு வழங்கும் அரிசியை மாநில அரசு ரூ.1க்கு வழங்குகிறது. மத்திய அரசிடமிருந்து, தமிழகம 36.78 டன் அரிசியை பெறுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அந்தியோஜனா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு 20 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டத்தால், 20 லட்சம் டன் என்பது 24 லட்சம் டன்னாக உயரும். இந்த மசோதாவால் 82 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். மசோதாவால் கிராமப்புறங்களில் 75 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 50 சதவீதம் பேரும் பயன்பெறுவார்கள். அவசரகதியில் உணவு பாதுகாப்பு மசோதாவை கொண்டு வரவில்லை. உணவு பாதுகாப்பு மசோதா கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதமே பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பார்லி., நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு பல மாநிலங்களின் கருத்துக்களை கேட்டறிந்ததது. நிலைக்குழு அளித்த தகவலின் பேரில் திருத்தங்கள் செய்யப்பட்டது என கூறினார்.

மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மசோதாவில் நாட்டில் உள்ள 82 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், 5 கிலோ அரிசி, கோதுமை மற்றும் தானியங்களை ஒருவருக்கு தலா ரூ.3,2,1 என்ற அளவில் வழங்கப்படுவதை மசோதா உறுதி செய்யும்