ஆந்‌திராவில் ஜனாதிபதி ஆட்சி?:நீர் போருக்கு வழி முதல்வர்

 தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கு எதிர்ப்புதெரிவித்து வரும் நிலையில் பிரச்னைகளை சமாளிப்பதற்காக ஆந்திர மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 
தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு:


ஆந்திராவை பிரித்து தெலுங்‌கானா மாநிலம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளது. இந்நிலையில் மாநிலத்ததை பிரிக்க கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அரசு நிர்வாகம் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. 
இத‌னை தவிர்க்கும் விதமாக மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா ? என மத்தியஅரசு ஆலோ‌சனை நடத்தி வருகிறது. அரசு ஊழியரகளின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிரான மனு விசாரணையின் போது கருத்து தெரிவித்துள்ள உதவி சொலிசிட்டர் போனம் ‌‌அ‌சோக்கவுட் இத‌னை காரணமாக கூறி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முடியாது என தெரிவித்தார். 
முதல்வர் கடும் எதிர்ப்பு:


தெலுங்கானா தனி மாநில அறிவிப்பிற்கு பின்னர் ஆளும் காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து எம்.பிக்கள், எம்.‌எல்.ஏக்கள் பலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து அதற்கான கடிதங்களை கவர்னரிடம் அளித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் கிரண் குமார் ரெட்டி ‌கட்சிதலைவர் சோனியாவை சந்தித்து தனி மாநில கோரிக்கைக்கு கிளம்பியிருக்கும் எதிர்ப்பு குறித்து விவாதித்தார். இருப்பினும் முதல்வரின் கருத்து நிராகரிக்கப்பட்டது. முன்னதாக கிரண்குமார் ரெட்டி தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தி்யில் பேசுகையில் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டாம் விரைவில் நல்ல பதில் வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கட்சி தலைவர் சோனியாவுடன் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கிரண்குமார்ரெட்டி மக்கள் தான் எஜமானர்கள் மக்களின் கருத்தை மதிக்க தவறினால் அரசியல் வாதிகள் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறினார். ‌மேலும் ‌தெ‌லுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால் மேலும் இரு மாநிலங்களிடையே கிருஷ்ணா நதிநீரை பங்கிடுவதில் பிரச்னை ஏற்பட்டு தண்ணீர் போருக்கு வழிவகுக்கும் சூழ்நிலை உருவாகும்என எச்சரித்தார். 
காங்கிரஸ் தீவிரம்:


இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறுகையில் தனிமாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு 20 தினங்களாக அறிக்கைகளை தயாரித்து வருகிறது. தனி மாநிலம் அமைவது உறுதி. இதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது என கூறினார். 
அதே போல் கட்சியின் பொது செயலாளர் திக்விஜய்சிங் கூறுகையில் தனி மாநில கோரிக்கை என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் பரிந்து‌ரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என கூறினார்.

பார்லிமென்டில் அமளி: பிரதமர் அறிக்கை சரியில்லை என எதிர்க்கட்சிகள் கூச்சல்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள், காணாமல் போனது தொடர்பாக, பார்லிமென்டின் இரு சபைகளிலும், பிரதமர் மன்மோகன் சிங், நேற்று அறிக்கை தாக்கல் செய்து பேசினார். "அந்த அறிக்கையில், உருப்படியாக எந்த விளக்கமும் இல்லை' எனக்கூறி, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமளியில் இறங்கி, பரபரப்பை ஏற்படுத்தின.


எதிர்க்கட்சிகள் ரகளை:


நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் காணாமல் போனது தொடர்பாக, கடந்த வாரம், பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் ரகளையில் ஈடுபட்டன. "பிரதமர் மன்மோகன் சிங், இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தின. இதையடுத்து, பார்லிமென்டின் இரு சபைகளிலும், பிரதமர் மன்மோகன் சிங், நேற்று அறிக்கை தாக்கல் செய்து பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விஷயத்தில், எதையும் மறைக்க, அரசு முற்படவில்லை. இது குறித்து, விசாரணை நடத்தும், சி.பி.ஐ.,க்கு, முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. காணாமல் போன, சுரங்க ஒதுக்கீடு கோப்புகளை கண்டறிய, அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. அதில், பலன் கிடைக்கவில்லை எனில், சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிடப்படும்.கோப்புகள் காணாமல் போன விவகாரத்தில், யார் குற்றம் செய்தார்களோ, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்."காணாமல் போன கோப்புகள் எவை எவை என்ற பட்டியலை, ஐந்து நாட்களுக்குள் அளிக்க வேண்டும்; தவறு செய்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை, இரண்டு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும்' என, கடந்த மாதம், 29ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை, மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்றும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

உடனே வெளியேறினர்:


முதலில், ராஜ்யசபாவில், 12:30 மணிக்கு, அறிக்கை தாக்கல் செய்த பிரதமர், அதை வாசித்து முடித்தவுடன், கொஞ்சமும் தாமதிக்காமல், சபையை விட்டு வெளியேறி விட்டார். இதை, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், சற்றும் எதிர்பார்க்கவில்லை. தங்களின் கேள்விகள் எதற்கும், உருப்படியாக பதில் அளிக்காமல், ஏதோ கடமைக்காக, ஒரு அறிக்கையை தாக்கல் செய்து விட்டு, அதன் பிறகும், எதிர்க்கட்சிகளை மதிக்காமல், சபையை விட்டு, பிரதமர் வெளியே சென்று விட்டதாக கூறி, பா.ஜ., - எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ., - எம்.பி.,க்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் வெங்கையா நாயுடு, அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் உட்பட, பலர் ஆவேசமாகப் பேசினர். இதையடுத்து, பா.ஜ., - எம்.பி.,க்களுக்கும், காங்கிரஸ் எம்.பி.,க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று, சபை ஒத்திவைக்கப்பட்டது.ராஜ்யசபாவில் அறிக்கை தாக்கல் செய்த பிரதமர், மதிய உணவு இடைவேளைக்கு பின், லோக்சபா வந்தார். அங்கும், தன் அறிக்கையை, மளமளவென வாசித்த பிரதமர், உடனடியாக, சபையை விட்டு வெளியேறினார்.

இதனால், கடும் அதிருப்தியடைந்த, பா.ஜ.,வைச் சேர்ந்த, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ""சபையை அவமதித்து விட்டார் பிரதமர். உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், பிரதமர் நடந்து கொள்கிறார். எதிர்க்கட்சிகளின் எந்த ஒரு கேள்வியையும் எதிர்கொள்ள விருப்பம் இல்லாதவராக உள்ளார்,'' என்றார். இதையடுத்து, பிரதமருக்கு எதிராக, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் கோஷம் எழுப்பினர்.

இந்த சூழ்நிலையில், நிதியமைச்சர் சிதம்பரம் எழுந்து, மசோதா ஒன்றை, தாக்கல் செய்து பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் கோஷங்கள் தொடர்ந்ததால், சபையை ஒத்திவைப்பதாக, சபாநாயகர் அறிவித்தார். தன் பேச்சை பாதியிலேயே முடித்துக் கொள்ள நேரிட்டதால், நிதியமைச்சர் அதிருப்தி அடைந்தார்."பிரதமர் அறிக்கையில், உருப்படியாக எதுவுமே இல்லை' என்று கூறி, சபையில் பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியை ஏற்படுத்திய நேரத்தில், தி.மு.க., பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின், ஐக்கிய ஜனதா தளம், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகளின் எம்.பி.,க்கள் அனைவரும், அமைதியாக இருந்தனர்.

பைல்கள் பட்டியல் :


இதற்கிடையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விசாரணைக்காக, தேவைப்படும் கோப்புகள் பட்டியலை, அட்டர்னி ஜெனரலிடம், சி.பி.ஐ., நேற்று அளித்தது."நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விசாரணைக்கு தேவைப்படும், கோப்புகள் பட்டியலை, அட்டர்னி ஜெனரலிடம், ஐந்து நாட்களுக்குள், சி.பி.ஐ., வழங்க வேண்டும்' என, கடந்த வாரம், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, நிலக்கரி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய, சி.பி.ஐ., தனக்கு தேவையான பைல்கள் பட்டியலை தயாரித்தது. அந்தப் பட்டியலை நேற்று, அட்டர்னி ஜெனரல், வாகன்வதியிடம் ஒப்படைத்தது.

ஸ்பெக்ட்ரம் இலவச ஒதுக்கீடு ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

தேசத்தின் மதிப்புமிக்க சொத்து ஸ்பெக்ட்ரம்; அதை இலவசமாக கொடுக்க தர்ம ஸ்தாபனம் அல்ல' என, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, கூடுதல் ஸ்பெக்ட்ரம் இலவசமாக ஒதுக்கப்பட்டது தொடர்பான வழக்கில், மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் அறிவுரை கூறியது.

பார்தி, வோடாபோன், ரிலையன்ஸ், ஐடியா செல்லுலார் ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, கூடுதல் ஸ்பெக்ட்ரம், இலவசமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த விசாரணையில், நீதிபதி, ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச், மத்திய அரசிடம், கடும் கேள்விகளை எழுப்பி, அறிவுரை வழங்கியது. 

இது தொடர்பாக, நீதிபதிகள் எழுப்பிய கேள்வி வருமாறு:தொலைதொடர்பு கம்பெனிகளுக்கு, எவ்வித கட்டணமும் இல்லாமல், இலவசமாக வழங்கப்பட்டது ஏன்? எந்த காரணத்திற்காக வழங்கப்பட்டது? இலவசமாக வழங்குவதற்கு, இது தர்ம ஸ்தாபனம் அல்ல. ராணுவத்திடம் இருந்து, ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை எடுத்து, பொதுமக்களுக்கு தொலைதொடர்பு சேவை வழங்குகிறோம் என்று கூறி, மத்திய அரசு வழங்கியுள்ளது.ஸ்பெக்ட்ரமுக்குரிய விலை, பல்லாயிரம் கோடிகள் ரூபாய். இது, தேசத்தின் சொத்து; இதை இலவசமாக ஒதுக்கீடு செய்யக் கூடாது. தேசிய சொத்துக்களை, ஒதுக்கீடு செய்வதற்குரிய நடைமுறையை, பின்பற்றி இருக்க வேண்டும். கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக, மத்திய அரசு மற்றும் ஏழு தொலை தொடர்பு நிறுவனங்களிடம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தோம். ஆனால், ஓராண்டு ஆகியும், பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதற்காக, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, சுப்ரீம் கோர்ட் சட்ட சேவை ஆணையத்தில், டிபாசிட் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்

ஊழல் பின்னணியில் காலம் தள்ள விரும்பவில்லை : கேரள முதல்வர் உம்மன் சாண்டி விரக்தி

"ஊழல் குற்றச்சாட்டின் நிழலில், காலம் தள்ள விரும்பவில்லை. சூரியசக்தி மின்சார பேனல் முறைகேடு தொடர்பாக, எந்த விசாரணைக்கும் தயார்,'' என, கேரள முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, உம்மன் சாண்டி கூறியுள்ளார்.

பல கோடி முறைகேடு : கேரளாவில், சூரியசக்தி மின்சார பேனல் தயாரித்து தருவதாக கூறி, சரிதா நாயர் என்ற பெண், ஏராளமானோரிடம், பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, புகார் எழுந்தது.
இந்த ஊழலில், முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, உம்மன் சாண்டிக்கும், அவரின் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும், தொடர்பு உள்ளதாக, பிரதான எதிர்க்கட்சியான, இடதுசாரி கூட்டணியினர், போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். மாநில அரசும், விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. ஆனாலும்,"முறைகேட்டுக்கு பொறுப்பேற்று, முதல்வர் உம்மன் சாண்டி, தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், ஆளும், காங்., கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கு இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆளும் கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம், திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது.

பிரதமர் வேட்பாளர் விவகாரம் : பா.ஜ., ராஜ்நாத்சிங் உறுதி

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் வேட்பாளராக, மோடியை அறிவிப்பது தொடர்பாக, கட்சிக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. மோடியை, பிரதமர் வேட்பாளராக்குவது தொடர்பான அறிவிப்பு, தக்க நேரத்தில் வெளியாகும்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில், மாநில பா.ஜ., செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது, "குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை, கட்சியின் பிரதமர் வேட்பாளராக உடனே அறிவிக்க வேண்டும்' என, பலரும் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து, ராஜ்நாத் சிங் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியை போல, பா.ஜ.,வில், எந்தப் பிளவு இல்லை. பிரதமர் வேட்பாளர் யார் என்பதில், யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து, தகுந்த நேரத்தில் அறிவிப்பு வெளியாகும். மத்தியில் ஆளும், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பொருளாதார கொள்கையில் மட்டுமின்றி, நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது. உலகில் எந்த ஒரு அரசும், நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு, எதிர்க்கட்சியை காரணம் காட்டியது கிடையாது. இவ்வாறு, ராஜ்நாத் சிங் பேசினார்.

இட ஒதுக்கீடு: மாயாவதி காரசாரம்

அரசு பணிகளில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட திருத்தம் கோரி, பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி, ராஜ்யசபாவில் நேற்று காரசாரமாக பேசினார். ""அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவை, பல மாநில அரசுகள் பின்பற்றத் துவங்கி விட்டன. இது குறித்து அரசியல் சட்ட திருத்தம், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது; லோக்சபாவில் நிலுவையில் உள்ளது.
அதை விரைந்து நிறைவேற்ற வேண்டும்,'' என, மாயாவதி கூறினார். அவருக்கு ஆதரவாக, அவர் கட்சி, எம்.பி.,க்கள் குரல் கொடுத்ததால், சபையில், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சட்ட அமைச்சர், கபில்சிபல், ""சுப்ரீம் கோர்ட் உத்தரவை மறுஆய்வு செய்ய, மேல் முறையீடு செய்துள்ளோம்; லோக்சபாவிலும் திருத்தத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என்றார். எனினும், அதை கேட்காமல், பகுஜன் சமாஜ், எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், சபை, பத்து நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டசபை முன் போராட்டம்

"தெலுங்கானா மாநிலம் தேவையில்லை; ஒருங்கிணைந்த ஆந்திரா அவசியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த, 15 அமைச்சர்கள், 40 எம்.எல். ஏ.,க்கள், 15 எம்.எல்.சி.,க்கள், நேற்று, ஐதராபாத் நகரில், மாநில சட்டசபை முன், நான்கு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். "ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும்' என, ஜூலை 30ல், மத்திய அரசு அறிவித்ததில் இருந்து, அம்மாநிலத்தில் இரு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்